8Grad System Examiners

வாய்ப்பாட்டு ஆசிரியர் கவனத்ணிற்கு...

ஒவ்வொரு குழந்தையும் அருமையா பாடறாங்க. அவங்களுக்கு நல்ல குரல்வளம் இருக்கிறது. ஆனா வாய்ப்பாட்ட பொறுத்தவரை ஒவ்வொரு குழந்தைகளுக்கும் ஸ்ருதி தான் முக்கியம். அதனால் அவங்கள ஸ்ருதியோட பாடச் சொல்லித்தரணும். அதுக்கு அவங்களுக்கு ஸ்ருதிப் பாக்ஸ் அவசியம். அத வெச்சிகிட்டு ப்ராக்டீஸ் பண்ணா எல்லா குழந்தைகளும் பெரிய ஆளா வருவாங்க. ஸ்ருதியில கான்செண்ட்ரேசன் பண்ணி பாட ஆரம்பிச்சாங்கண்ணா அவங்கள அடிக்க ஆளே கிடையாது..

அதே சமயத்துல அவங்களுக்கு சொல்லித் தர்ற குருமார்கள் இந்த அகாடமி கொடுத்திருக்கும் அனைத்து பாடங்களையும் தவறாமல் சொல்லிக் கொடுக்க வேண்டும். குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் பாடத்திட்டத்தில் உள்ள அனைத்து பாடங்களையும் சொல்லிக் கொடுக்க வேண்டும். எதையும் ஸ்கிப் செய்துவிடக்கூடாது. இதனால் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படக்கூடும்.

குழந்தைகள் அருமையா தாளம் போடுகிறார்கள். ஆனால் தாங்கள் பாடும் ராகங்களுக்கான தாளத்தின் பெயர்களை கேட்டால் பதிலளிப்பதற்கு கால அவகாசத்தை எடுத்துக்கொள்கிறார்கள். இதை தவிர்க்கவேண்டும். ஆசிரியர்கள் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்கும் போதே இது தான் தாளத்தின் பெயர் என்பதை அவர்களின் நினைவில் நிறுத்துமாறு பயிற்சி அளிக்கவேண்டும்.

அதனையடுத்து சில மாணவச் செல்வங்கள் ஸரளி வரிசையில் பாடும் போது அதற்குரிய டெம்போவை விட்டு விலகி பாடுகிறார்கள். இதையும் ஆசிரியர்கள் கவனத்தில் கொண்டு, அந்த மாணவச் செல்வங்களை கனிவுடன் திருத்தவேண்டும். ஆசிரியர்கள் ஒரு பாடத்தை நடத்தி முடித்திருந்தாலும், அந்த பாடத்திற்கான பயிற்சியை தொடர்ந்து அளித்து வரவேண்டும். அப்போது தான் அவை மனப்பாடமாகும். தேர்வின் போது மாணவச் செல்வங்கள் சாஹித்தியத்தை தவறாமல் உச்சரிப்பதற்கு இது சரியான வழியாக இருக்கும்.

ஆசிரியர்கள் ஒரு கிரேடிற்கான அனைத்துப்பாடங்களையும் மாணவ செல்வங்களுக்கு சொல்லிக் கொடுத்திருந்தாலும் அந்த மாணவர்கள் கிரேடு தேர்விற்கு தகுதியானவரா? அவரை இந்த முறை தேர்விற்கு அனுப்பலாமா? அல்லது அடுத்து நடைபெறும் தேர்விற்கு அனுப்பலாமா? என்பதை ஒரு முறைக்கு பல முறை யோசித்து முடிவெடுக்கவேண்டும். ஒவ்வொரு கிரேடுக்கும் குறிப்பிட்ட காலகட்டத்திற்குள் மாணவர்களை தேர்ச்சி பெற வைத்துவிட வேண்டும் என்ற கட்டாய சூழலில் பணியாற்றாதீர்கள்.அது போன்ற சூழலை நாங்களோ, இந்த அகாடமியோ விரும்பவில்லை.

இந்நிறுவனத்தில் இருந்து வெளிவரும் கலைஞர்கள் எல்லாம் சர்வதேச தரமுடையவர்களாக இருக்கவேண்டும் என்ற காரணத்திற்காக அயராது பாடுபட்டு வரும் தேர்வுக்குழுவினரை சோர்வடைய வைத்துவிடாதீர்கள். அதே போல் ஒவ்வொரு முறை நடத்தப்படும் ஆசிரியருக்கான பயிற்சிப் பட்டறையில் தவறாமல் பங்கு பெற்று, மாணவர்களிடமுள்ள திறமையை வெளிக்கொணர்வதற்குரிய நுட்பங்களை அறிந்துகொள்ளுங்கள். நாங்கள் எங்களின் எண்ணங்களைத்தான் பகிர்ந்துகொள்கிறோம். நீங்களும் உங்களின் எண்ணங்களை வெளிப்படுத்துங்கள்..

பரதநாட்டிய ஆசிரியர் கவனத்ணிற்கு...

எந்த பாணியாக இருந்தாலும், எந்தவித கற்கை நெறியாக இருந்தாலும் பரதத்தைப் பொறுத்தவரை முதலில் தட்டடவு தான். அதனை நடத்தும் முறைகளில் தான் மற்றவர்கள் வேறுபடுகிறார்கள். இந்த அடவுகளை மாணவகள் மேற்கொள்ளும் போது சில குறைகள் காணப்பட்டன. அவையெல்லாம் மாணவர்களின் கவனக்குறைபாடே தவிர ஆசிரியைகளின் கற்பித்தல் முறைகளில் அல்ல என்பதை உணர முடிந்தது.

அடவுகளைப் பொறுத்த வரை கை வழி கண் செல்ல.. என்ற வகையில் தான் அதன் பிரயோகங்கள் இருக்கும். தஞ்சை நால்வர்கள் அடவுகளை தொகுக்கும் முன் ஏராளமான அடவுகள் இருந்தன. அவர்கள்தான் அதிலுள்ள சிறப்பான நுட்பங்களை தொகுத்து பன்னிரண்டாக சுருக்கினர். இந்த மாணவர்கள் எல்லாம் அந்த அடவைத் சுத்தமாகவும், நேர்த்தியாகவும் வெளிப்படுத்தியது என்னை கவர்ந்தது. தொடர்ந்து அரைமண்டியிடுவது என்பது நாட்டியத்தில் இன்றியமையாத அங்கமாகப் பார்க்கப்படுகிறது. தேர்வுக்கு வந்த ஏராளமான மாணவிகள் பதட்டத்தின் காரணமாகவோ அல்லது இது போன்ற தேர்வு விதிமுறைகள் புதிது என்பதாலோ முழுமையாக அரைமண்டியை நளினத்துடன் வெளிப்படுத்தவில்லை. நான் இதை குறையாக சொல்லவில்லை. இதற்கு ஏராளமான பயிற்சி தேவை. மாணவர்களுக்கு விதிமுறைகளைப் பற்றி தெளிவாக எடுத்துச் சொல்லியிருப்பதால் அரைமண்டியிடுவதின் நளினம் பற்றி நன்கு அறிந்துவைத் திருக்கிறார்கள். அடுத்த முறை அதனை செய்து காண்பித்து எங்களின் கிரேடை உயர்த்திக்கொள்வோம் என்று எங்களிடம் சொன்னபோது நாங்கள் உள்ளபடியே சந்தோஷமடைந்தோம்.