8GRAD SYSTEM EXPERIENCE

8 கிரேடிங் சிஸ்டம் பிரிட்ஜ் அகாடமி பெற்ற அனுபவம்

ஃபைன் ஆர்ட்ஸுக்கு சர்வதேச அளவில் ஒப்புக்கொள்ளப்பட்டு வழங்கப்பட்டு வரும் 8 கிரேடு சிஸ்டத்தை அறிமுகப்படுத்தி, இரண்டு தேர்வுகளை நடத்தியதில் நாங்கள் எதிர் கொண்டு பெற்ற மற்றும் யோசிக்க வைத்த அனுபவத்தை உங்களிடம் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறோம்.

முதல் தேர்வைவிட இரண்டாவது தேர்வில் ஆசிரியர்களின் எண்ணிக்கையும், மாணவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்திருந்ததால், முதல் தேர்வில் பங்குபெற்ற மாணவர்களுக்கும், ஆசிரியர் களுக்கும் தங்களின் தனித்திறன் மீதான நம்பிக்கை மேம்பட்டிருந்ததையும் காண முடிந்தது.

இத்துடன் அவர்கள் இந்த கிரேடு சிஸ்டத்தின் மீது வைத்திருந்த நம்பிக்கை அசைக்கமுடியாததாக இருந்ததைக் கண்டு உள்ளம் மகிழ்ந்தோம்.

அதே சமயத்தில் எங்களுக்கும்   நுண் கலையை கற்பிக்கும் ஆசிரியர்களுக்குமான உறவில் (கலந்துரையாடல் நிகழ்வில் பங்குகொள்வதாகட்டும்., பாடத்திட்டத்தை கற்பிக்கும் முறையில் உள்ள நடைமுறை சிக்கல்களுக்கான அய்யங்களை கேட்டு தெளிவடைவதிலாகட்டும் - மற்றவர்களையும் இதன் தேவையை எடுத்துணர்த்தி இணைப்பதில் காட்டும் ஆர்வமாகட்டும்..) ஒரு புதிய பரிமாணத்தை எட்டி பிடித்திருக்கிறோம் என்றே எண்ணத் தோன்றுகிறது. அத்துடன் எங்களுக்கும், ஆசிரியர்களுக்கும், தேர்வு கண்காணிப்பாளர்களுக்கும், மாணவர்களுக்கும் என அனைவருக்குமிடையே நல்லதொரு புரிதலுடன் கூடிய நல்லிணக்கம் ஏற்பட்டு அவை வலுவடைந்து வருவதாகவே கருதுகிறோம்.

எழுத்துத் தேர்வு மற்றும் செய்முறை தேர்வு என இரண்டு பிரிவுகளாக நடத்தப்பட்ட இந்த இரண்டு தேர்வுகளிலும் கலந்துகொண்ட மாணவர்கள் முதலில் இந்த தேர்வு முறையைப் புரிந்துகொண்டு அதற்கு ஆதரவாக தங்களைத் தயார்ப்படுத்திக் கொண்டு வந்ததை பாராட்ட கடமைப்பட்டிருக்கிறோம். குறிப்பாக சொல்லவேண்டும் என்றால், தேர்வில் நேர்முகத்தின் பொழுது, ஒரு குழந்தை தன்னை விட்டு மற்ற இருவரையும் கேள்வி கேட்டதைப் பற்றி, மிகுந்த அவஸ்தைப் பட்டு அழுத காட்சி, எங்களை நெகிழ வைத்தது. கேள்வி கேட்டுத் துளைத்தாலும் அதை ஏற்றுக் கொள்ளும் மனப் பக்குவம் இந்த வயதிலேயே இவர்களுக்கு வந்துள்ளது எங்களுக்கு ஒரு நல்ல தொடக்கமாக இருந்தது.

பள்ளிகளில் படிக்கும் பாடப்பிரிவைப் போல் அதாவது தமிழ், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் போன்று ஆண்டு முழுவதும் கற்று, அதற்குப் பின் தேர்வு எழுதி வெற்றி பெறுவதை போல் இந்த நுண்கலைக்கான படிப்பு இல்லை என்பதை ஒவ்வொரு மாணவர்களின் பெற்றோர்களும் உணர்ந்திருந்தனர். கடின உழைபபு, விடா பயிற்சி, குருமார்களின் ஆசி ஆகியவைதான் கலை சார்ந்த கல்வியில் பிரதானம் என்பதையும், அதற்காக அவர்கள் தங்களது பிள்ளைகளை தயார்ப்படுத்தியதையும் காண முடிந்தது.

வாய்ப்பாட்டுக்கான கல்வியை பயிலும் குழந்தைகள், அதற்கான பாட வகுப்புகளுக்கு தவறாமல் வருகை தந்து ஆச்சரியப்பட வைத்ததும் இல்லாமல், அவர்களும் கற்று தரும் ஆசிரியரையும் உற்சாகப்படுத்தி வருவதையும் கண்டோம். இது வாய்பபாட்டு என்று இல்லாமல் இசைக்கருவி, நாட்டியம், ஓவியம் என எல்லா பிரிவுகளிலும் நீடிப்பதால் உண்மையிலேயே நாங்கள் மட்டற்ற மகிழ்ச்சியில் திளைக்கிறோம்.

ஒவ்வொரு மாணவருக்கும் இந்த கிரேடு முடிந்ததும் அடுத்த கிரேடிற்குச் செல்லவேண்டும் என்கிற தன்முனைப்பு அதிகரித்து வருவதையும் கண்டு ஆனந்த மடைந்தோம். இந்த நிலையில் எங்களின் பயணம் தொடர்ந்தால்.. Art for All என்ற எங்களின் நோக்கத்தை விரைவில் தொட்டுவிடுவோம் என்று நம்புகிறோம்.

நம்பிக்கை தான் வாழ்க்கை! தொட்டு விடும் தூரம் அதிகமில்லை!!

அடுத்த தேர்வை ஆவலோடு எதிர்நோக்கியிருக்கிறோம்.